அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்கனவே அரச ஊழியர்கள். 2019 ஆம் ஆண்டில், சுமார் 20,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு குறிப்பாக மாகாண பாடசாலைகளில் பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழுவானது ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பின்படி ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படலாம். இதன்படி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டுடன், பரீட்சை திகதியின் வயது 40 ஆக நீட்டிக்கப்பட்டு, அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
25-03-2023 அன்று பரீட்சை திட்டமிடப்பட்ட நிலையில், 23-03-2023 அன்று, அபிரிவிருத்தி உத்தியோகத்தர்களில் ஒரு குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பரீட்சையை இடைநிறுத்தி வைக்க உத்தரவு பெற்றனர். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த ஆட்சேர்ப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த வழக்கை விரைவாக முடிக்க கல்வி அமைச்சு விரும்புகிறது.
அதன் பின்னர் ஆசிரியர்கள் ஓய்வு பெற்று மற்றும் சேவையை விட்டு வெளியேறியமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பின் பிரகாரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பின் படி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் வெளிநாட்டு மொழி பட்டதாரிகளை பணியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆட்சேர்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பை பாதிக்காது.